(UTV | கொழும்பு) –
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கிரியெல்ல, கொடகவெல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் பதிவாகவில்லை. மண் சரிவு, கனமழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கு கூடியளவில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவு களிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්