உலகம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தியமைக்கவேண்டும் – சர்வதேச ஆணைக்குழு.

(UTV | கொழும்பு) –

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை இச்சட்டவரைபைத் திருத்தியமைக்கவேண்டியது அவசியமென சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு கடந்த மேமாதம் 2 ஆம் திகதி நீதியமைச்சு அறிவித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான சட்டமூலம் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும் திருத்தங்களுடன்கூடிய இப்புதிய வரைபின் 3 ஆவது சரத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின்பேரில் மாத்திரம் ஒருவரை இரண்டு மாதங்கள் வரை தடுத்துவைப்பதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் வலுவிழக்கச்செய்யப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் லான் செய்டர்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தடுப்புக்காவல் உத்தரவைப் பரிசீலனை செய்வதற்கான நீதிவானின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணமானது அடிப்படை சட்ட ஆட்சிக் கோட்பாடுகளுக்கு முரணானவகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமெனில் இச்சட்டவரைபு மேலும் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல வரைபின் சில சரத்துக்கள், அரசியலமைப்பின் 13 ஆவது சரத்துக்கும், இலங்கை கைச்சாத்திட்டிருக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானவைகயில் அமைந்திருப்பதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

‘இலங்கையானது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற விசேட சட்டங்களை நீக்கிவிட்டு, சட்டவாட்சியுடன் முரண்படாத குற்றவியல் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதக்குற்றங்களைக் கையாள்வதற்கு முன்வரவேண்டும். இல்லாவிடின் குறைந்தபட்சம் தற்போது வெளியிடப்பட்டள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக அதனை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று லான் செய்டர்மன் வலியுறுத்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – உலக அளவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி