(UTV | கொழும்பு) –
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கெதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இனவாதமாக பேசும் நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் கூட்டமைப்பினரே என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடமாகாணத்தில் பௌத்த மதஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் அங்குள்ளோரின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என மேர்வின் கூறியது மிக கடுமையான தவிர்க்க வேண்டிய வார்த்தையாக இருப்பினும் அவரது சமூக அக்கறை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவரை ஆக்கிய தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ நாசமாக்கிய நாட்டை ஜனாதிபதி ரணில் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்த்திக்கொண்டிருக்கையில், நாடு அமைதியாக இருக்கும் போது இந்த நாட்டில் அடிக்கடி இனவாத சூட்டை உருவாக்குவது தமிழ் கட்சிகள்தான்.
சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைத்தால் மட்டும் போதும் என்றிருக்கும் போது 13 வேண்டும், வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும், ஜனாதிபதி இனப்பிரச்சினை பற்றி பேச வேண்டும், சமஷ்டி வேண்டும் என தமிழ் இனவாத கட்சிகள் கூப்பாடு போடுவதால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இக்கருத்துக்களை எதிர்க்க வேண்டியுள்ளது. போதா குறைக்கு சாணக்கியனும் ஆளுனர் தொண்டைமானும் தம் முட்டாள்தனமான இனவாத காட்டுமிராண்டி செயலால் சும்மா குறட்டை விட்டு தூங்கும் கிழக்கு முஸ்லிம்களையும் உசுப்பேத்தி விட்டார்கள்.
இத்தகைய இனவாத கருத்துக்கள் அதிகரித்ததால் காணாமல் போயிருந்த மேர்வின் சில்வாவும் வாளோடு கிளம்பி விட்டார். அவர் இந்தளவு பேச வழி சமைத்தது தமிழ் கட்சிகள்தான் என்பதை மறுக்க முடியாது. மேர்வினின் பேச்சில் பல உண்மைகள் உள்ளன. போகிற போக்கில் தமிழ் கூட்டமைப்பினர் மேர்வினை எம்பியாக்கி விடுவர் போலுள்ளது. ஆகவே நாட்டில் இனங்களுக்கிடையில் சூடேற்றுவதை சகலரும் தவிர்த்து அனைத்து மக்களினதும் அடிப்படை பிரச்சினையான பொருளாதார முன்னேற்றத்துக்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கூறிக்கொள்கிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්