(UTV | கொழும்பு) – அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ள எதிர்பாரக்கிறாேம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பெப்ரவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் போது வருடாந்தம் இரு தடவைகள் அந்த விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பகிரங்கமாக அறிவித்திருந்தோம். குறிப்பாக ஜூலை மாதத்தில் கட்டண திருத்தம் மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தோம். அதற்கிணங்கவே நாம் தற்போது மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியில் பலருக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை தெளிவில்லாமல் உள்ளது. அதனால் தான் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் அதனை எதிர்க்கப் போவதாக அறிவித்துள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலன்களை மக்கள் தற்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரும். அதன் போது எதிர்க்கட்சியினர் அதனை நிவர்த்தி செய்ய முன்வருவார்களா? அரசாங்கம் ஒருபோதும் வருமானத்தை அடிப்படையாக வைத்து செலவினங்கள் பற்றி சிந்திக்கவில்லை.
எரிபொருள் போன்றவற்றில் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாமல் நாம் சர்வதேச கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். எமக்கு கடன் ஒத்துழைப்பை வழங்குவோர், இனியும் வழங்கவுள்ளவர்கள் அவ்வாறு நாம் செயற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்று சிந்திக்க வேண்டும். மேலும் நாம் தற்போது மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளோம். இதைவிட அதிகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நெருக்கடியான காலங்களிலும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தற்போது மக்களுக்கு பலன் தர ஆரம்பித்துள்ளதுள்ளது.
ஜூன் மாத இறுதியில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் என கடந்த இரு வாரங்களாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்தனர். எனினும் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களால் அவ்வாறு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්