உள்நாடுசூடான செய்திகள் 1

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

(UTV | கொழும்பு) –

கல்முனை விவகாரம் என்பது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களுடைய வீட்டு பிரச்சினை அல்ல. இது கல்முனை வாழ் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினை. இதனை தீர்க்க வேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேசன் தலைவருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளர் அப்துல் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

கல்முனை விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தவை பின்வருமாறு;

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையில் பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் கட்சி தலைவர்கள் அமைதி காத்து பொறுமையாக இந்த பிரச்சினையை பக்குவமாக கையாண்டு வரும் சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் போன்றவர்கள் சமூகங்களுக்கிடையிலான பின்விளைவுகளை அறியாமல் சமூக குழப்பங்களை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

மட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் மீது இருக்கின்ற தனிப்பட்ட கோபத்தினை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தமது இயலாமையை மறைக்கவும் முஸ்லிம் சமூக மாற்றுக் கட்சிக்காரர்கள் அபாண்டமானதும்,  முரண்பாடானதுமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சட்டவிரோதமாக ஆயுதமுனையில் உருவாக்கப்பட்ட அந்த காரியாலயத்தை சட்டரீதியான காரியாலயமாக மாற்றுவதற்காக தமிழ் கட்சிகள் எடுக்கின்ற இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் தரப்பில் இருக்கின்ற சிலரும் ஆதரவு வழங்குவது போன்று செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

கல்முனை என்பது முஸ்லிம்களின் முக வெற்றிலை என்ற அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும், அரசியல் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துடன் கல்முனைக்காக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியமாக இருக்கின்றது.

கல்முனை பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும் என்பதற்காக நீதிமன்ற வாசல் ஏறி நியாயம் கோரி இருக்கின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஷ் அவர்களுடைய துணிவையும், சமூக பற்றையும் இவ்வேளையில் பாராட்டுகிறேன்.  இந்த வழக்கு தாக்கல் செய்வது என்பது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாத்திரம் அல்ல கல்முனையை நேசிக்கின்ற யாராக இருந்தாலும் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு யாரும், வேறு எந்த கட்சியும் செய்யாமல் இருப்பதை நினைத்துப் பார்க்கின்ற போது கவலையாக இருக்கின்றது.

ஜனநாயக நாடு ஒன்றில் கருத்து முரண்பாடுகள் இருப்பது வழமையே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கருத்து வேறுபாடுகளைத் துறந்து எவ்வாறு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைகின்றார்களோ அதுபோன்று  எமது முஸ்லிம் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு எமக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளைத் துறந்து கல்முனை விவகாரத்தில் நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றிணை வேண்டியது இப்போது அவசியமாக இருக்கின்றது.

கல்முனை விவகாரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைநீட்டிக்கொண்டிருந்து ஆன பலன் எதுவும் இல்லை. ஆகவே சகல முஸ்லிம் கட்சி தலைவர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும், சிவில் அமைப்புகளும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் ஒற்றுமையுடன் ஒருமித்து நின்று கல்முனைக்கான விடிவினை பெற்று எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளை செய்ய முன் வர வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

நூறுல் ஹுதா உமர் -கல்முனை செய்தியாளர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு