(UTV | கொழும்பு) – மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மீனவ மக்களின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாளொன்றுக்கு 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான விசேட கடிதம் ஒன்று நேற்று மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோனினால் கடற்றொழிலுக்கான மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் மீனவ மக்களின் தேவைக்காக மண்ணெண்ணெய் ஏற்றிச் செல்லும் 357 பெளசர்களை விடுவிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், எரிபொருள் நிலையங்கள் 206 பெளசர்களை மாத்திரமே பெற்றுள்ளன. இதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மேலதிகமாக செலவிட்டுள்ளது.
இந்த செலவினம் அதிகரித்த போதிலும், மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது போதியளவு மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதனால் மீனவ சமூகம் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் செயலாளர்களுடன் இணைந்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் வழங்கும் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.