உள்நாடுசூடான செய்திகள் 1

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”

நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல.

நாட்டில் தற்போதைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18)  இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார ஸ்திர நிலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தலைவர்கள் முறையாக செயல்படுகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான சம்பவங்களை நாம் நோக்கும்போது சில விடயங்கள் தெளிவாகின்றன.

இவ்வாறான நிலைக்கு மத்தியில்  நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல.

நாட்டில் தற்போதைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.

அத்துடன் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகின்றன. இதன் காரணமாக சரத் பொன்சேகா எம்.பியினால் இதற்கு எதிராக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இவர்களுக்கு ஏன் பிணைகொடுக்க முடியாமல் இருக்கின்றது.இதுதொடர்பாக சர்வதேச நாடுகளும் அவதானம் செலுத்தி வருகின்றது. நாட்டின் சட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படுகிறதா? அவை தேவையில்லாத பிரச்சினைகளுக்கே வழி வகுத்துள்ளது.

அத்துடன் நாட்டின் நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?. கடன் மறு சீரமைப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

சீன அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30 வருட யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் மத்திய தர வருமான நாடாக இலங்கை கணிக்கப்பட்ட போதும் தற்போது அது குறைந்த வருமானம் கொண்ட நாடாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒழுக்கமற்றதாக, முறையற்றதாக காணப்பட்டமையே அதற்கான காரணம். பிரபல்யமான அரசியல் முறைமைகள் பின்பற்றப்பட்டு வந்த நாடாக எமது நாடு முன்பு திகழ்ந்துள்ளது.

நீண்ட காலமாக நிதி நெருக்கடியினால் வரவு செலவுத் திட்ட குறை நிரப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்கிணங்க பணவீக்கத்தை நிவர்த்திக்கவே வரி மூலமான வருமானங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை 3800 பில்லியன் ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பமளிக்க வேண்டியது அவசியம். அதில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் கூட எமக்கு டொலர் இல்லாத நிலை காணப்படுகிறது.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு மட்டும் வருடாந்தம் 160 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்த வகையில் அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

அத்துடன் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி தலைமையிலான தேசிய சபையின் உபகுழு  பொருளாதார மறுசீரமைப்புக்கு சிறந்த யோசனைகளை முன் வைத்துள்ளது. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அவர் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள இதன் மூலம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

Related posts

13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம்

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?