உள்நாடு

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடத்தில் ஊடக அறிவினை மேம்படுத்தல் மற்றும் பாடாசாலைகளுக்கு மத்தியில் ஊடகக் கழகங்களை (Media Clubs) உருவாக்கும் நோக்கிலான “சியன ஊடக வட்டத்தின்” செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் (29) நடைபெற்றது.

பாடசாலையின் 125 மாணவர்கள் பங்கு பற்றிய இந்நிகழ்வு, மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது. காலை 9.30 மணி அளவில் தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் என்பன ஏற்றப்பட்டு, தேசிய கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டன.

முதலாவது அமர்வு, கிராஅத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் வரவேற்புரை மற்றும் அறிமுகவுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து “சியன ஊடக வட்டத்தின்” தலைவரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.இசட். அஹ்மத் முனவ்வர் “சியன ஊடக வட்டம்” பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தியதுடன், அனுவபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

முதலாவது அமர்வு நிறைவடைந்ததுடன், இடைவேளையைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வு ஆரம்பமானது. இரண்டாவது அமர்வில், முதலாவது விரிவுரையை “ஊடகத்துறை சார் வாய்ப்புக்களும் அதன் எதிர்காலமும்” என்ற தலைப்பில் “சியன ஊடக வட்டத்தின்” செயலாளரும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தருமான எஸ்.ஏ.எம். பவாஸ் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் யூடியூபர் றிஸா (DBCS) விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.

அன்று மாலை அவர் வெளிநாடு செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அவர் நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது விரிவுரையை, “சமூக ஊடகங்களின் பயன்பாடு” எனும் தலைப்பில், “சியன நியூஸ்” இணையத்தளத்தின் ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம் நிகழ்த்தினார்.

மதிய நேர இடை வேளையைத் தொடர்ந்து “நவ ஊடகங்களும் திறன் கருவிகளும்” எனும் தலைப்பில், பிரபல ஊடகப் பயிற்றுவிப்பாளர் இஸ்பஹான் சாப்தீன் விரிவுரையாற்றினார்.
இதன் போது, “நவீன ஊடகங்களைப் பயன்படுத்துவது எவ்வாறு…?” என்பன தொடர்பிலும், மாணவர்களுக்கு பல வழிகாட்டல்களையும், விழிப்புணர்வுகளையும் அவர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அதற்கிடையில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், “சியன நியூஸ்” இணையத்தள வடிவமைப்பாளரும், மலேஷியன் எயார்லைன்ஸில் (API Development specialist) ஆகப் பணி புரியும் எம்.எம்.எம். ரிம்ஸானின் விரிவுரை இடம்பெற்றது.

இரண்டாவது அமர்வில் இடம்பெற்ற விரிவுரைகளின் இறுதி விரிவுரையாக, “இலங்கை வானொலியின் வரலாறும் பணிகளும்” எனும் தலைப்பில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஸ்ஹான் நவாஸின் விரிவுரை இடம்பெற்றது.

குறித்த விரிவுரையின் போது, மாணவர்களை அழைத்து அவர்களுக்கு ஒலிபரப்பு தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான பொதுப் பரீட்சை ஒன்றும் நடாத்தப்பட்டது.

மூன்றாவது அமர்வு, பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் மாலை ஆரம்பமானது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஊர்த்தலைவர், பிரபல வர்த்தகர், கொடை வள்ளல் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் விஷேட உரையொன்றை நிகழ்த்தினார்.

மாணவர்களுக்கு பல அறிவுரைகளை அவர் இதன்போது வழங்கினார்.

இந்நிகழ்வில், கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர், ‘ஈழத்து நூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

“சியன ஊடக வட்டத்தின்” தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் மற்றும் உப தலைவர் சிராஜ் எம். சாஜஹான் ஆகியோர் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

மூன்றாவது அமர்வின் முக்கிய நிகழ்வாக, சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பலரும், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் சிறப்பு அதிதியாக, ஏசியன் லங்கா (Asian Lanka) நிறுவனத்தின் தலைவரும், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான ஜே.எம். பளீல் கலந்து கொண்டார்.

இச்சிறப்பு நிகழ்வில், ஊர்ப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை உப அதிபர் எம். ரிம்ஸான், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட “சியன ஊடக வட்டத்தின்” உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

– ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை/கட்டுநாயக்க நிருபர் )

Related posts

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் நாளை!

பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதி வழங்கப்படும் – அனுர

editor

வானிலை முன்னறிவிப்பு