உலகம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு

(UTV |  லண்டன்) – இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8ம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19ம் திகதி நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பாதுகாப்பு பணிக்கு மட்டும் சுமார் ரூ.7.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.59 கோடி) செலவாகும் என்று நியூயார்க் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வரலாற்றில் மிகவும் செலவு செய்யும் ஒற்றை நாள் நடவடிக்கையாக எலிசபெத்தின் இறுதி சடங்கு இருக்கும். வெளிநாட்டு தலைவர்களை பாதுகாக்க, எம்.ஐ.5 மற்றும் எம்.ஐ.6 உளவுத்துறை நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் ரகசிய சேவைத்துறை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.

இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இறுதிச் சடங்கு பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 59 கோடி செலவிடப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 100 கோடி வரை செலவாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ராணி எலிசபெத், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் மரணம் அடைந்தார். அங்கிருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு ராணி உடல் கொண்டு வரப்பட்டது.

இது போன்று அனைத்து நடவடிக்கைகக்கும் ரூ.100 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இத்தொகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் குறைந்த பட்சம் ரூ.80 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்க மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லகர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷியா உள்பட 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு அழைப்பு விடுக்காததற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை ஒழுக்கக்கேடானதாக கருகிறோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

Related posts

ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதலுக்கு IS பொறுப்பேற்பு

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா?