(UTV | கொழும்பு) – அரிசியின் விலை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பி. கே. ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் அரிசிக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 225 ரூபாவிற்கும், ஒரு கிலோ நாட்டு அரிசி 215 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். தனியார் நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் தேவையான தரத்தில் ஒரு கிலோ நெல் 120 ரூபாவுக்கும், 18 சத நிபந்தனையுடன் ஒரு கிலோ ஈரநெல் 100 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்க எந்த காரணமும் இல்லை என்றும், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து உதவியாக பெறப்படும் அரிசி நாட்டில் விநியோகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் பருவகாலத்திற்கு தேவையான அனைத்து இரசாயன உரங்களையும் வழங்குவதாக விவசாய அமைச்சர் உறுதியளித்ததாகவும், அதற்கேற்ப பணிகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் அரிசி பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.