(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன அரசியல் கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாத காரணத்தினால் சர்வகட்சியை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி யோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளார். பிரதமரின் அனுமதியுடன் வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதுவும் தீர்வு இன்றி முடிவுக்கு வந்தது.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சில அரசியல் கட்சிகள் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும், சில கட்சிகள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் ஆதரவு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன. சில அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உண்மைகளை விளக்கியுள்ளார்.
கட்சிகள் அளிக்கும் முன்மொழிவுகள் ஒவ்வொரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு, அதன்பின், அடுத்த வாரம் கருத்துகளை எடுத்து வேலைத்திட்டம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கத்தின் பதினெட்டு அமைச்சுப் பதவிகள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களதும் வருகையால் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். எனினும், அடுத்த வாரம் இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.