(UTV | கொழும்பு) – ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நழுவவிடப்பட்டதாகவும், சந்தர்ப்பவாத அரசியல் தம்மிடம் இல்லை எனவும், அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் கூடிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக சுதந்திரமாக போராடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது புதிய கதைகளை கூறி வருவதாகவும், உண்மையில் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் பிரியாவிடை “அலரி மாளிகை நிகழ்வின்” போதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வன்முறைக்கும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் தான் முற்றாக எதிரானவன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஒன்பதாம் திகதியான அன்றைய நாள் முழுவதும் நடந்தது பயங்கரவாதமே என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தர்ப்பவாத அரசியல் தவளைகளுக்கு நிச்சயம் மக்கள் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டிவரும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதிலிருந்து யாரும் விடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.
புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அது குறித்து இன்னும் நேர்மறையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்த வன்னம் அரசாங்கத்தின் ஆட்சி முறை இயல்பை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அது ஒரு மூர்க்கத்தனமான முட்டாள்தனம் எனவும், இதனால் ஏற்பட்ட அழிவை எந்த நாகரீகமுள்ள ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.