(UTV | புதுடெல்லி) – ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பாராளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார். அதன்பின்னர் திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தனர்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல்-மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.