உள்நாடு

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

(UTV | கொழும்பு) – தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் மீள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதரவளிக்க இலங்கையின் சகல பிரஜைகளும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

CNNக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கமும் நிர்வாகமும் செய்யாத கடன் மறுசீரமைப்பை தாம் ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான பணத்தை கொள்வனவு செய்வதற்கான குறுகிய கால நிதி மூலோபாய நடவடிக்கைகளை தயாரிப்பதே எதிர்வரும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த சில வாரங்களில் இந்தியா மற்றும் சீனாவுடன் நிதி உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அந்த ஆதரவை அவர்கள் வழங்குவார்கள் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முதல் சுற்று ஒப்பந்தங்கள் இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய வங்கியின் திட்டங்களில் வட்டி வீத அதிகரிப்பு எதுவும் இல்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வொஷிங்டன் : இலங்கை தூதரகத்திற்கு பூட்டு