(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று (10) முதல் அமுலுக்கு வருகிறது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள 22% அதிகரிப்பின் பிரகாரம் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ.40 ஆக உயர்கிறது.
கதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான பேருந்து கட்டணங்கள் அதிகபட்சமாக ரூ.2,417ல் இருந்து ரூ.2,948 ஆக அதிகரித்துள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்புக்கான ரூ.1,210 பேருந்தின் கட்டணம் தற்போது ரூ.1,480 ஆக இருக்கும் அதே வேளையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகும்புரவில் இருந்து மாத்தறை வரையிலான புதிய பேருந்து கட்டண திருத்தம் 1,320 ரூபாயாகவும், மாகும்புரவில் இருந்து காலிக்கு 1,060 ரூபாயாகவும் உள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ.4,450 என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா பேசுகையில், அண்மைய எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டண திருத்தம் அவசியமானது என தெரிவித்தார்.
பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்கும் போது மேலும் பல காரணிகள் பரிசீலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.