(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள சுமார் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதுடன், பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் செய்து வந்த சுமார் 200,000 பேர் வேலை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
சமையல் எரிவாயு , டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 50 சதவீத பேக்கரிகள் செயல்படாமல் உள்ளன.
முட்டை, வெண்ணெய், மரக்கறி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பேக்கரி தொழிலுக்கு வழங்குபவர்களும் அதனை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
பேக்கரி உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பேக்கரி பொருட்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் பன் ஒன்றின் விலை ரூ.100 ஆக உயரும் என்பது தவிர்க்க முடியாதது.
பெட்ரோல் நெருக்கடியால் 90 சதவீத ஷூன் பான் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் லாரிகள் 5 முதல் 6 நாட்கள் வரை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால், தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.