உள்நாடு

‘நமக்கு அரசு கிடைத்தால் நாளை முதல் டொலருக்கு தட்டுப்பாடு இருக்காது’

(UTV | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கைப்பற்றினால், வெளிநாடுகளில் இருந்து மாதாந்தம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளது.

பொதுக்கூட்டமொன்றின் போது பேசிய பிரதம செயலாளர் டில்வின் சில்வா, கட்சியானது பல்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்கள் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை ஒருங்கிணைத்து, வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை உத்தியோகபூர்வ வழிகளில் செலுத்த ஊக்குவிக்கும் என்றார்.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்கும் வேலைத்திட்டம் தங்களிடம் இருப்பதாக டில்வின் சில்வா வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்து, இடைக்காலத் தகுதியின் அடிப்படையில் அரசாங்கத்தைக் கைப்பற்றத் தயார் என அறிவித்துள்ளனர்.

சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக வருவதற்கு வழி வகுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் அரச தலைவரை பதவி விலகுமாறு கோரியுள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருந்தாலும், அமைச்சரவையை அமைப்பதற்கு இன்னும் சிலரது ஆதரவைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டு வருவதற்கும், பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும், ஆறு மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கும் தாங்கள் எதிர்பார்த்துள்ளதாக டில்வின் சில்வா கூறினார்.

நாட்டை நிர்வகிப்பதற்கான தெளிவான வேலைத்திட்டம் அவர்களிடம் இருந்த போதிலும், ஜனாதிபதி அவர்களின் அழைப்புகளை புறக்கணித்ததாக அவர் கூறினார்.

Related posts

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.

கடந்த 24 மணித்தியாலத்தில் 878 பேருக்கு தொற்று : இருவர் பலி