உள்நாடு

69 வருடத்திற்கு பின்னர் இன்று நாடு முற்றாக முடங்கியது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று (06) நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச, பகுதியளவில் அரச மற்றும் தனியார் துறைகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் “மக்களின் கருத்திற்கு தலைவணங்கி அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்” எனும் தொனிப்பொருளில் இந்த பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வி, போக்குவரத்து, தோட்ட, அரச மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.

ஹர்த்தாலில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணையுமாறு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் இன்று வீதிக்கு இறங்கி தமது எதிர்ப்பை வௌிப்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தோல்வியடைந்துள்ளமையை தற்போது ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ரயில் ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களிலும் பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனவே, இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் தற்போது கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் S.B.விதானகே தெரிவித்தார்.

அதிகளவிலான ரயில் சேவைகள் தற்போது வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கமைய, இந்த பணிப்பகிஷ்கரிப்பில் அனைத்து ரயில்வே ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுமென அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார தொழிற்சங்கங்கள் பலவும் இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இன்றைய தினம் சேவையிலிருந்து விலகி ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்குவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

இன்றைய ஹர்த்தாலுக்கு செவிசாய்த்து அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டுமென அவர் கூறினார்.

அவ்வாறு நடைபெறாத பட்சத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகளில் தமது சேவை தொடருமென அவர் குறிப்பிட்டார்.

தாதியர்களும் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.

கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு, கறுப்பு நிற ஆடைகளை அணிந்து வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வௌியிடுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கோரிக்கை விடுத்தார்.

இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கூறினார்.

இன்றைய தினம் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் சிகிச்சைகளின்றி திருப்பியனுப்பப்பட மாட்டார்களென சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் சங்கம் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர் சங்கத்தினர் இன்று அனைத்து கடமைகளில் இருந்தும் விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் பொது சுகாதார பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர்.

ஹர்த்தால் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஶ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கிராம உத்தியோகத்தர்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

ஹர்த்தால் காரணமாக வங்கி நடவடிக்கைகளும் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன.

Related posts

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!