(UTV | கொழும்பு) – ஜனாதிபதிக்கும் 41 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாடு எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷமன் பியதாச, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி குடிமக்களால் தற்போது பாரிய மக்கள் எழுச்சி இடம்பெற்று வருவதாக ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லாட்சியை ஸ்தாபிக்குமாறு கோரிவரும் அதேவேளையில் மக்கள் தேசத்துக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்க்கின்றனர் என்றார்.
எனினும் தற்போதைய நிர்வாகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சாதகமான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சி தனது எதிர்கால வியூகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.