(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உயர்த்தியுள்ளது.
54 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 214 ரூபாவாகும்.
அத்துடன், 27 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும். வரலாற்றில், எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த விலை அதிகரிப்புடன், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின், லங்கா பெட்ரோல் 92 ரக லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா ப்ரிமியம் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 263 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 214 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா மைல் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 220 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா ப்ரிமியம் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 252 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 7 நாட்களுக்குள் இரண்டு தடவைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையே, இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களுக்குள் ரூபாவின் பெறுமதி 57 ரூபா வரையில், இரு தடவைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையால், பெட்ரோல் மற்றும் டீசலை தரையிறக்கும் செலவில் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதென லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது, லீற்றர் ஒன்றின் விலைக்கு சமாந்தரமான அளவு அதிகரித்துள்ளதென லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.