(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலை அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் முன்மொழிவுகளை வெளியிட்டது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பிரேரணையை ஜனாதிபதிக்கு அறிவிக்க நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது பிரேரணையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்தார்.