உள்நாடு

பொருளாதார சபை வாராந்தம் கூட்டப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக்கும் நோக்கில், பொருளாதார சபையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் சர்வ பொருளாதார கொள்கை, கொரோனா தொற்றுக்கு பின்னரான தேசிய பொருளாதார நடவடிக்கை, பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கை, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை, நிதி கொள்கை மற்றும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரதான அபிவிருத்தி செயற்றிட்டங்கள் உள்ளிட்ட உள்நாட்டு பொருளாதார கொள்கை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து, முழு பொருளாதார நிலைமையையும் முகாமைத்துவம் செய்வதே பொருளாதார சபை கூடுவதற்கான நோக்கமாகும்.

பொருளாதார சபையின் வழிகாட்டல்களுக்கு அமைய, குறித்த அமைச்சு, திணைக்களம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்கள், தேவையான நேரத்தில் அமைச்சரவை அனுமதியுடன் தீர்மானங்களை செயற்படுத்துவதற்கும் பொருளாதார சபையை கூட்டும்போது தேவைக்கமைய ஒவ்வொரு துறைகளுக்கும் போதுமான நிபுணர்களை அழைப்பதற்கும் ஜனாதிபதியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணாயக்கார ஆகியோர் பொருளாதார சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்