(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் புதிய பாடசாலை தவணை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
அதிகளவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களை குழுக்களாக அழைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வகுப்பறையில் 20 முதல் 40 மாணவர்கள் இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும்.
மேலும் 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாகப் பிரித்து ஒரே நாளில் அல்லது வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இன்று துப்புரவு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், நிலவும் சூழ்நிலை காரணமாக நாளை பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறையான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்தார்.