(UTV | கொழும்பு) – ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா, என்பது தொடர்பிலான உத்தரவை, எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி தெரிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) அறிவித்தது.
இந்த மனு இன்று மேனகா விஜேசுந்தர மற்றும் எஸ்.குமாரன் ரத்னம் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், மனுதாரர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பான பல சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
மேல் நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் நோக்கில் மனுதாரர் செயற்படுவதாக தெரிவித்த பிரதி மன்றாடியார் நாயகம், மேல்நீதிமன்ற வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் தமது ஆட்சேபனையை முன்வைத்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், மனு குறித்த தீர்மானத்தை மார்ச் 29ஆம் திகதி அறிவிக்க உத்தரவிட்டது.