(UTV | சென்னை) – அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ‘வலிமை’ மட்டுமின்றி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளும் நேற்று பிப்.1ஆம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளன. எனினும், திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். விரைவில் திரையரங்குகளுக்கான கட்டுப்பாடுகளும் விலக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படத்துக்கான புதிய ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் பிப்ரவரி 24ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.