விளையாட்டு

‘இனியும் தொடர மனமில்லை’ – சானியா மிர்ஸா

(UTV |  இந்தியா) – இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தனது ஓய்வு திட்டங்கள் தொடர்பாகப் பேசியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த பிறகு ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா. திருமண பந்தத்தில் இணைந்து குழந்தை பெற்ற பிறகும் இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது 2022 சீசனின் இறுதியில் டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா டென்னிஸ் வீராங்கனையாகத் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார். இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்று மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 2007-ம் ஆண்டு ஒற்றையர் தரவரிசையில் 27-வது இடத்தில் இருந்தது அவரது அதிகபட்ச சாதனை ஆகும்.

ஓய்வு தொடர்பாகப் பேசியுள்ள 35 வயதாகும் சானியா, “எனக்கு வயதாகிக்கொண்டே வருகிறது. என் உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். இன்றைய போட்டியில் கூட என் முழங்கால் வலித்தது. நாங்கள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதுபோன்ற காயங்களில் இருந்து குணமடைய இப்போதெல்லாம் நிறைய நாட்கள் ஆகின்றன. இதைவிட ஒவ்வொரு நீண்ட தூரப் பயணத்தின் போதும் எனது 3 வயது மகனை அழைத்து வருவது அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறேனோ என்கிற பயம் என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது.

பொதுவாக விளையாட வந்துவிட்டால் தினமும் உத்வேகம் பெறவேண்டும். முன்பு இருந்த உத்வேகம் இப்போது என்னிடம் இல்லை. இதனால் இனியும் தொடர எனக்கு மனமில்லை. போதுமான ஆற்றல் இருக்கும்வரை இந்த விளையாட்டைத் தொடர்வேன் என நான் முன்பே சொல்லியிருந்தேன்.

கடந்த டிசம்பர் இறுதியில் அல்லது இந்த வருடத்தின் தொடக்கத்தின்போது இதை அறிவிக்க நினைத்தேன். அதன்படி, இனி விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். எனினும், இந்த ஆண்டின் சீசன் முழுவதும் தற்போதைக்கு விளையாட விரும்புகிறேன். இந்த சீசனில் விளையாட்டை அனுபவிக்க விரும்புகிறேன். கடந்த ஆண்டு ஒன்பது போட்டிகளில் பங்கேற்ற நான், இந்த ஆண்டு விளையாடுவதற்குப் போதுமான உடல் தகுதியில் இருப்பதாக உணர்கிறேன். குறைந்தபட்சம் அமெரிக்க ஓபன் தொடர் வரையாவது விளையாட வேண்டும். அதுவே எனது இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

ஹர்த்தாலுக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்காது – ஏ.எல் கபீர்.

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்