(UTV | கார்டோம்) – வடஆப்பிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்.
அதன் பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக அப்தல்லா ஹம்டோக் பொறுப்பேற்றாா்.
கடந்த அக்டோபர் மாதம் 25-ம் திகதி சூடான் இராணுவம் அந்த இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும், அப்தல்லா ஹம்டோக்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
இதற்கிடையே, இராணுவம், அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் குழு மற்றும் முன்னாள் கிளர்ச்சி குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் இராணுவம் ஒப்புக்கொண்டது. இதனால் அங்கு நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில், சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசியதாவது:
“.. நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் மற்றொரு நபருக்கு தேசத்தை வழிநடத்தும் வாய்ப்பை வழங்க முடியும்.
விரிவடைந்து வரும் இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசியல் சக்திகளுக்கு இடையேயான சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
நம் நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இப்போது, நம் தேசம் ஒரு ஆபத்தான திருப்புமுனையை கடந்து கொண்டிருக்கிறது, அது அவசரமாக சரி செய்யப்பட வேண்டும்..” என தெரிவித்தார்.
அவரது இராஜினாமா பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சூடானை அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.