(UTV | கொழும்பு) – முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண முறையில் எதிர்காலத்தில் உரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 100 கிலோ கிராம் பச்சை கொளுந்துக்கு 40 கிலோ உரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் இன்மையால் மரக்கறிகளின் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
நாட்டின் பெரும்பாலான பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை கொச்சிக்காய் கிலோ ஒன்றின் சில்லறை மற்றும் மொத்த விலை 800 ரூபா முதல் ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதுதவிர, போஞ்சி, கரட், பீட்ரூட், லீக்ஸ் மற்றும் கோவா ஆகியவற்றின் மொத்த விலை 220 ரூபா முதல் 500 ரூபாவாக காணப்படுகின்றது.