உள்நாடு

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

(UTV | கொழும்பு) –  SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு இன்று (15) அழைக்கப்பட்டது.

இப்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வீட்டு எரிவாயு சிலிண்டரில் இருக்க வேண்டிய முறையான கலவை இல்லை எனவும், அதில் இருக்க வேண்டிய கலவை குறித்து விவாதிக்க தர நிர்ணய பணியகத்தின் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

தர நிர்ணய பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களே தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தர நிர்ணய பணியகம் வகுத்துள்ள நியமங்களுக்கு அமைய எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரில் உள்ள வாயுக்களின் கலவையை குறிக்கும் ஸ்டிக்கரை சிலிண்டரில் காட்சிப்படுத்த தனது கட்சிக்காரர் ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி நாளை நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் மனுவைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை..!

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!