உள்நாடு

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க பாகிஸ்தான் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான், சியல்கொட் நகரில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலையுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒரு போதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலுடன் தொடர்புடைய அனைத்து காணொளி காட்சிகளும், தகவல்களும் தற்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

லிட்ரோ எரிவாயு (Litro Gas) தொடர்பில் புதிய தகவல்- விலைப்பட்டியல்

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”