(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியல்கோட் நகரில் நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெறுவதுடன், அதனுடன் தொடர்புடைய சகலருக்கும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசாரணைகள் தம்மால் நேரடியாக அவதானிக்கப்படுவதுடன், விசாரணைகள் எந்த வகையிலும் தவறான செயற்பாட்டினை கொண்டிருக்காது எனவும் இம்ரான் கான் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த நாட்டின் அரசாங்கம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சியல்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர், அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் எரியூட்டப்பட்டது.
இதுதொடர்பான காணொளியும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உறுதிப்படுத்தல்களை பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் ஊடாக மேற்கொள்ள முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.