(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத், வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணை அதிகாரி அஸ்மா கமால் ஆகியோர், இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அவரது அமைச்சு குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், குறிப்பாக இலங்கையில் பாகிஸ்தானின் பௌத்த சுற்றுலா துறையை மேம்படுத்துதல் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து பதில் உயர்ஸ்தானிகர் வர்த்தக அமைச்சருக்கு விளக்கப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கிடையிலும் வர்த்தக திறனை மேம்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம், கூட்டு முயற்சிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், பாகிஸ்தானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சருக்கு பதில் உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.