உள்நாடு

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனிதநேயம் நிறைந்த கண்ணியமான மனித அன்பை கட்டியெழுப்புவதற்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முஹம்மது நபி நாயகம் அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களின் அமைப்பை நிறுவிய முன்னோடியாவார். பிறரின் நம்பிக்கையை வென்றெடுத்தமையால் அவர் அல் அமீன் என்று அறியப்பட்டார்.

இஸ்லாமிய போதனைகளின்படி, காலத்திற்கு காலம் இறைவனால் அனுப்பப்படும் இறை தூதர்களில் இறுதி தூதராக முஹம்மது நபி கருதப்படுகிறார்.

முஹம்மது நபி நாயகம் அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அறிவார்ந்த புரட்சியால் இல்லாதொழித்து சமத்துவத்திற்காக அயராது உழைத்த ஒரு அறிஞராவார். நபி நாயகம் அவர்கள் ஊழல் நிறைந்த சமுதாயத்தில் அல்லாஹ்வின் தூதராக இருபத்தி மூன்று ஆண்டுகள் கடவுளின் பணியைச் செய்தார்கள்.

உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகள் மத்தியில், நபி நாயகத்தின் நோக்கமானது மனித சமுதாயத்தை நல்லொழுக்கம் மற்றும் அகிம்சையால் நிரப்புவதாகும்.

உலக வாழ் மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவதே கடவுளின் தூதரான நபி நாயகத்தின் போதனையின் சாராம்சமாகும். அவ்வழி செல்லும் அனைத்து முஸ்லிம் மக்களும் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப தங்கள் பங்களிப்பை உச்ச அளவில் வழங்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

கொவிட் தொற்றை எதிர்கொண்டு நாம் கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன்.

சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஏழை மக்களுக்கு உதவி செய்து நபி நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

   

Related posts

ரியாஜ் பதியுதீனின் கைது; அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்

மேலும் பலருக்கு கொரோனா உறுதி

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு