உலகம்

நாம் சரிவினை சந்தித்து இருக்கலாம் : பயனாளர்களின் பாதுகாப்பே முக்கியம்

(UTV | கொழும்பு) – இலாபத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“எங்களின் சுயலாபத்துக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு சற்றும் தர்க்கரீதியாக சரியானது இல்லை. எனக்குத் தெரிந்து எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கோபப்படுத்தும், மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் வகையில் தனது சேவைகளை கட்டமைக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊழியர்களுக்கு மார்க் ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பினார். பின்னர் அந்த கடிதத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டார்.

அந்தக் கடிதத்தில் மார்க் ஜூக்கர்பர்க் கூறியதாவது:

நான் சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அண்மையில் நடந்த பேஸ்புக் அவுட்டேஜ். இதுமாதிரியான முடக்கத்தை நாம் சந்தித்தது இல்லை. இது நம் தொழில்நுட்பப் பிரச்சினையையும் தாண்டி, நமது சேவை மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் புரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு. நமக்கு லாபம் சரிந்திருக்கலாம், நமது வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களுக்கு மாறியிருக்கலாம். ஆனால், நமது பேஸ்புக்கை நம்பி எத்தனை மக்கள் தங்களின் நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது, எத்தனை பேரின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது, எத்தனை பேர் தங்கள் சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய ஆதரவை கொடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்டது என்பதே முக்கியம்.

இரண்டாவதாக நமது நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் கொடுக்கப்பட்டதைக் குறித்து பேச விரும்புகிறேன். நமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே நமக்குப் பிரதானம். அதைப்போலத்தான் அவர்களின் மன நலன் மீதும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால், நமது செயலும், எண்ணமும் இங்கே தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நம் நிறுவனத்தின் மீது பூசப்பட்டுள்ள போலியான அடையாளத்தை நாம் நம்பாது இருப்போமாக.

நமது சுயலாபத்துக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு சற்றும் தர்க்கரீதியாக சரியானது இல்லை.

இதற்கு ஒரே ஒரு உதாரணத்தை நான் கூற விரும்புகிறேன். நாம், நியூஸ் ஃபீட் முறையை அறிமுகப்படுத்தினோம். இதனால் நமது பயணர்களின் டைம்லைனில் வைரல் வீடியோக்கள் குறைவாகவும் அவர்களின் நட்புக்கள், உறவுகள் பகிரும் பதிவுகள் அதிகமாகவும் கிடைத்தது. இதனால், பயனர்கள் பேஸ்புக்கில் செலவிடும் நேரம் குறைந்தது. இது நாம் லாபத்தைக் காட்டிலும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதற்கான சாட்சி இல்லையா?

இருப்பினும் நாம் செய்யும் நல்ல வேலையுன் கூட இங்கே மோசமாக சித்தரிக்கப்படுவது வருத்தத்தை தருகிறது. அது பேஸ்புக் ஊழியர்களான உங்களையும் பாதிக்கும் என நான் கவலைப்படுகிறேன்.

இந்தத் தருணத்தில் பேஸ்புக்கில் தலைமைப் பொறுப்பில் உள்ள பலருக்கும் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். நமது பணியை அடுத்த சில நாட்களுக்கு ஆழ்ந்து கவனியுங்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை உலகுக்குச் சொல்லுங்கள். நமது சேவை உலகிலேயே சிறந்த சமூக வலைதள சேவையாக இருக்கிறது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

   

Related posts

மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube