உலகம்

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்

(UTV |  காபூல்) – ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இடைக்கால அரசு அமைத்துள்ள தலிபான்கள் அரசில் மூன்றாவது கட்டமாக இணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆண்கள் மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டதற்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருமுறை அமைச்சரவை விரிவிக்கப்பட்டும் அதில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

தலிபான்கள் அறிவித்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை.

அமைச்சரவையில் இடம்பெற்ற பெரும்பாலான தலிபான்கள், தீவிரமான அடிப்படைவாதிகள், மதக் கோட்பாடுகளையும், அரசியல் விதிகளையும் சிறிதுகூட விலகாமல் கடினமாகக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இணை அமைச்சர்கள் பட்டியலை கடந்த மாதம் 20ம் தேதி தலிபான்கள் வெளியிட்டதிலும் ஒரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. “இணை அமைச்சர்கள் பட்டியலில் சிறுபான்மையாக இருக்கும் ஹசரா பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அமைத்துள்ள அரசு இடைக்கால அரசு. அமைச்சரவை விரிவாக்கம் இனிவரும் காலங்களில் நடக்கும்போது, பெண்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள்” என தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 3-வது கட்டமாக இணைஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை தலிபான்கள் நியமித்தனர். இதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் கூறுகையில் “3-வது கட்டமாக 38 இணைஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் சிறுபான்மையினருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன் மூலம் சர்வதேச சமூகத்தின் முன் தலிபான்கள் எதையும் மறைக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த புதிய இணை அமைச்சர்களில் பிரதமருக்கான இணை அமைச்சர், அமைச்சர்களுக்கு உதவியாளர்கள், இணைஅமைச்சர்கள், ஆப்கன் செஞ்சிலுவை சமூகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்பு, ராணுவத் தலைவர்கள், இணை அமைச்சர்கள் , காபூல், ஹெல்மெண்ட், ஹீரத், காந்தகார் மாகாணங்களுக்கு துணைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

Related posts

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!