(UTV | கொழும்பு) – பயங்கரவாதம் உலகளாவிய சவால் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரை நூறாண்டுக்காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களின் ஊடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் அரசாங்கம் உண்மையாகச் செயற்படுகிறது. இனப்பாகுபாடு, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினது அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாமல், நியாயமான முறையில் கருதி, அவர்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையுடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாக உள்ளது.
அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்ற தயாராகவிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
இது, 2030 இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.
சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை முடக்குவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இலங்கையானது, அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிமுறையாகக் காணப்படுவதும் நாட்டின் சனத்தொகையில் 14 சதவீதமானோர் தங்கியிருக்கும் தொழிற்துறையுமான சுற்றுலாத்துறை, பெரிதளவில் சரிவடைந்துள்ளது. சுற்றுலாத் தொழிற்றுறை மற்றும் ஏனைய பல துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகங்களுக்கு, வட்டி நிவாரணம் மற்றும் நிதி பெற்றுக்கொடுத்தல் போன்று, அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் மூலம் சலுகைகள் வழங்கப்பட்டன. நாளாந்தம் வருமானம் பெறுவோர் மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு, நிதி உதவிகளும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
நாடு முடக்கப்பட்ட காலப்பகுதிகளில் இவ்வாறான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால், அரச செலவானது அதிகரித்தது. தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நேரடிப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக ஏற்பட்ட இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளானவை, நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக இருந்த நிதியின் இருப்பைச் சீர்குலைய வைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இடங்களிலுமுள்ள சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது, தொற்றுப் பரவலிலிருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும். அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றி கண்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் மாத இறுதிக்குள், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றப்படும். மிக விரைவில், 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.
தொற்றுப் பரவல் முகாமைத்துவத்துக்காக, இரு தரப்பு மற்றும் பல தரப்பு நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் பொருள் உதவிகளால், இலங்கை பெரிதும் நன்மையடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.