உள்நாடு

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி இன்று உரை

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நேற்றைய தினம், ஆரம்பமாகியது.

நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற இக் கூட்டத்தில், இம்முறை ‘கொவிட் 19 நோய்த்தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தகுதன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கை நாட்டையும், மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி கோட்டபாய இன்று உரையாற்றவுள்ளார்.

23 ஆம் திகதி இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத்தொடரிலும், 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலிலும் பங்கேற்று ஜனாதிபதி கருத்துகளை முன்வைக்கவுள்ளார்.

நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற, ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ஜனாதிபதியும் உயர்மட்ட குழுவினரும் நாட்டிலிருந்து புறப்பட்டனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடனான இந்த விஜயத்தில் பங்கெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியாகப் பொறுப்பெற்ற பின்னர், அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டு ஜனாதிபதி கோட்டபாய புறப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத் தலைவராகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தொடர்களில் அரச தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளதோடு, இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள ஏனைய நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதியும், குழுவினரும் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் கட்டண அதிகரிப்பிற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 639 பேர் கைது

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்