(UTV | கொழும்பு) – கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலை அகற்றும் பணி எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“..பருவக்காற்று காரணமாக கப்பலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், கப்பலை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கப்பல் வைத்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. கப்பல் அகற்றப்படுவதால் நாட்டின் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்தும் ஆராய விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது..”
கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் காரணமாக இலங்கை மிகப்பெரிய அழிவை சந்தித்தது.
இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் ஆமைகளும் சுமார் 45 டொல்பின்களும் உயிரிழந்துள்ளன என்று கூறப்படுகின்றது. ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் நிறுவனம் ஆரம்பகட்ட நட்டஈடாக 72 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கியுள்ளது.