உள்நாடு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் (ஓய்வுபெற்ற) 2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சர் பீரிஸின் நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கு தலிபான் உறுதியளித்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதிமொழி அளித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான் விரைவில் அமைதியான அரசாங்க அமைப்பை உருவாக்கி உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒருங்கிணைக்கும் என பாகிஸ்தான் நம்புவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அந்நாட்டிலிருந்து இலங்கையர்களை வெளியேற்ற ஏனைய நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் உயர்ஸ்தானிகர் கட்டாக்கிற்குத் தெரிவித்தார்.

அமைச்சர் பீரிஸ் ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கைப் பிரஜைகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின் உதவியை நாடியதுடன், தனது அரசாங்கத்தால் முழுமையான ஆதரவு அதற்காக வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் கட்டக் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கட்டக் ஆகிய இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கும் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் இலங்கை மாணவர்களின் உயர் கற்கைக்கான கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டிய அதே வேளை, வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு விடயங்களில் அந்த வாய்ப்புக்களும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் புதிய திட்டங்களாக, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால உறவுகளை பன்முகப்படுத்தக்கூடிய பரஸ்பர ஆர்வத்தின் பரந்த பகுதிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

இந்த சந்திப்பில் வெளியுறவுச் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயும் இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஆகஸ்ட் 23

 

Related posts

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

மட்டக்களப்பில் சீனதூதரகத்தினால் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டம்

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு [UPDATE]