(UTV | கொழும்பு) – நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் ஒன்று கூடுதல் முதலான செயற்பாடுகள் இந்த தொற்று பரவுவதற்கு காரணமாக அமையும். இந்தியாவில் இவ்வாறான நிலை தவிர்க்கப்படாமையினால் இவ்வாறான நிலை ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம்.
திருமண வைபவங்கள் போன்றவற்றில் வரையறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை அடக்கு முறை என எவரும் கூறுவதில்லை. ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் போது அடக்கு முறையென சிலர் கூறுவதாக பொது மக்கள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற (14) நிகழ்வில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தற்போதைய கொரோனா நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடுவதை வரையறுக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொலிசாருக்கு தெளிவான பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஜனநாயக உரிமையாக இருந்தாலும் சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைவாகவே மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த நீர்த் தாக்குதல்களோ நீர் விசிறும் நடவடிக்கைகளோ கண்ணீர்ப் புகையை பிரயோகிக்கும் நடவடிக்கைகளோ தற்போது இடம்பெறுவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
திருமணம், இறுதிச் சடங்குகள் போன்ற நடவடிக்கைகளையும் சமய வழிபாட்டு நிகழ்வுகளையும் வரையறுக்கப்பட்ட ரீதியில் நடத்துவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என்று கூறுவதை எவ்வாறு ஒடுக்கு முறையாக அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொதுச் சுகாதார அதிகாரிகளின் எழுத்து மூலமான கோரிக்கைக்கு அமைவாகவே அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)