உலகம்

ஜனாதிபதியின் கொலையை தொடரும் பதற்றமும்

(UTV |  ஹைதி) – ஹைதி நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோயிஸ் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மற்றும் வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஹைதி. இதன் ஜனாதிபதியாக ஜோவெனல் மோயிஸ் என்பவர் இருந்தார். ஹாதி உள்ள 60% மக்கள் தினசரி 2 டாலருக்குக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இதனால் அங்கு சில ஆண்டுகளாகவே அமைதியற்ற சூழலே நிலவி வந்தது. அந்நாட்டின் தலைநகரிலும் கூட அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் அவ்வப்போது நிலவி வந்தது. குறிப்பாக இவரது பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் முடிவடைந்தது.

இதனால் எதிர்க்கட்சிகள் இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும், பதவி விலக மறுத்த ஜோவெனல் மோயிஸ் தனது ஜனாதிபதி பதவியை மேலும் ஓராண்டுக் காலம் நீட்டித்துக் கொண்டார். இதனால் ஜோவெனல் மோயிஸுக்கு எதிரான மக்கள் மனநிலை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 07ம் திகதி நள்ளிரவில் அவரது வீட்டில் புகுந்த சில மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவி, அங்குள்ள மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோவெனல் மோயிஸ் கொலை செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோவெனல் மோயிஸ் கொல்லப்பட்டதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நான்கு கூலிப் படையினரை ஹைதி பொலிசார் சுட்டுக் கொன்றனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜனாதிபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பொலிசாரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹைதி நாட்டின் தேசிய பொலிஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எனினும் அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியானார் ஜின்பிங்

சொந்தமாக நாடும் இல்லை.. வீடும் இல்லை  

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு