(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் பங்களாதேசம் ஆகிய இரு நாடுகளும் சார்க் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை (SAPTA), தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SAFTA), உலகளாவிய முன்னுரிமை வர்த்தக முறையை (GSTP), ஆசிய பசுபிக் வலய வர்த்தக உடன்படிக்கை ((APTA) மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பான வங்காள விரிகுடா நாடுகளுக்கான கூட்டுறவு (BIMSTEC) போன்ற உடன்படிக்கைகளின் பங்குதார நாடுகளாகச் செயற்படுகின்றன.
ஆனாலும் குறித்த உடன்படிக்கைகளின் கீழ் விசேட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள் குறைந்தளவிலேயே இடம்பெறுகின்றன.
கௌரவ பிரதமர் அவர்கள் கடந்த மார்ச் மாதம் பங்களாதேசத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய தேவை இருநாட்டுத் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, பங்களாதேசத்துடன் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதற்கு அந்நாட்டின் குறித்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடாத்துவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.