(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பலில் (MV x’press pearl) ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதோடு தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இந்த கப்பலில் இருந்து 25 பணிக்குழாமினரும் நேற்று (25) கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
அத்துடன் அதில் இருந்து 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன.
தீயணைப்பு பணியில் இலங்கை கடற்படைக்கு மேலதிகமாக இந்தியாவினாலும் கப்பல்களும் விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் இந்த கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்கள் இருக்கக்கூடும்.
எனவே கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கப்பல் தீப்பற்றியமை காரணமாக கடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் இரசாயன பொருட்களின் கலப்பு தொடர்பாக ஆய்வு செய்யுமாறு கடலாய்வு பணியகத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.