(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக நெதர்லாந்திலிருந்து விசேட குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தக் குழு இன்று(23) அதிகாலை கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதிக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கப்பலின் தீயணைப்பு பணிக்காக அந்த கப்பல் உரிமையாளருக்கு சொந்தமான இழுவை படகு ஒன்று குறித்த கடல் பகுதிக்கு நேற்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படைக்கு சொந்தமான படகொன்றும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 3 இழுவை படகுகளும் அனுப்பப்பட்டுள்ளன.
37,000 டன் நிறையுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் கடந்த 19ஆம் திகதி நங்கூரமிடப்பட்டது.
கப்பலில் 1, 486 கொள்கலன்கள் உள்ளன. அத்துடன் 25 மெற்றிக் டன் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட இரசாயனங்களும் குறித்த கப்பலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் அண்மையில் தயாரிக்கப்பட்டதெனவும் கடந்த பெப்ரவரி மாதம் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டதாகவும் மெரிடைம் எக்ஸிகியூடிவ் என்ற இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.