உள்நாடு

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடுகளை நாளை (21) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும்.

நடமாட்ட கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நாளை (21) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தை ஆகியனவற்றை மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீண்டும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் போது தேவையான மரக்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலங்கள், ஆளுநர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் சகல மொத்த, சில்லறை வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]