உள்நாடு

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?

(UTV | கொழும்பு) –  நாட்டின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது தம்பி ரியாஜ் பதியுதீன் ஆகியோரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதாக இலங்கை பொலிசார் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் இருவரும் ஏப்ரல் 24 அன்று கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அமைச்சரவையும், செவ்வாயன்று முஸ்லிம் பெண்கள் அணியும் பாரம்பரிய உடைகளான புர்கா மற்றும் நிகாப்பையும் தடை செய்ய முடிவு செய்தது.

பூகோள தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இராஜபக்ஷ அரசாங்கமும் அதன் இனவாத பங்காளிகளும் முஸ்லிம்-விரோத வகுப்புவாதத்தை தீவிரப்படுத்துவதையே இந்த இரு நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன.

2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவுடன் உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத குழு நடத்திய பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பிரதிபலிப்பாகவே இந்த கைதுகள் நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர். மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களில் நடந்த பயங்கரவாத குண்டு தாக்குதலால் 274 பேர் கொல்லப்பட்டதுடன் 570 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு பதியுதீன் தலைவராவார். மேலும் அவர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த இராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவினதும் அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, “[ஈஸ்டர் ஞாயிறு] தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதற்கான சூழ்நிலை மற்றும் விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில்” பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

இந்த கூற்றுக்கள் போலித்தனமானவை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது, ‘ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு பதியூதீன்கள் எந்தவொரு உதவியும் செய்ததாக அல்லது உடந்தையாக இருந்ததாக் கூறுவதற்கு எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை’ என்று பதியுதீன்களின் வழக்கறிஞர் ருஷ்டி ஹபீப்பின் வெளியிட்ட ஊடக அறிக்கை கூறியது. பெப்ரவரி 1 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ‘சந்தேகத்தின் பேரில்’ ரியாஜ் பதியுதீன் 2020 ஏப்ரலில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், தாக்குதலுடன் எந்தவொரு தொடர்பையும் உறுதிப்படுத்த ‘போதுமான ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை’ என்று பொலிசார் ஒப்புக்கொண்ட பின்னர் அவர் அக்டோபரில் விடுவிக்கப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை 702 பேரை பொலிஸ் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரோஹன கடந்த வார இறுதியில் ஒரு ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இவர்களில் 202 பேர் விளக்கமறியலில் வைக்கப்பபட்டுள்ளனர், 83 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் 80 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 16 அன்று, மற்றொரு முஸ்லிம் அரசியல் தலைவரான அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அவர் குற்றங்களைச் செய்ததாகக் கூறி பொலிஸ் கைது செய்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடனான தொடர்புகள் குறித்தும் அவர் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு சிரேஷ்ட மனித உரிமை வழக்கறிஞரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ‘பயங்கரவாத’ குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்கு முன்பு 10 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மார்ச் 12 அன்று, சர்வதேச மற்றும் இலங்கை மனித உரிமைக் குழுக்களிடமிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் மாணவர்களுக்கு ‘அதிதீவிரவாத கலந்துரையாடல்’ செய்ததாகக் கூறி ஹிஸ்புல்லா மீது சட்ட மா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

இலங்கை கவிஞரான அஹ்னஃப் ஜஸீம் என்ற 25 வயது கவிஞர், கடந்த ஆண்டு மே 16 அன்று கைது செய்யப்பட்டார். முஸ்லிம் அதிதீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் குற்றச்சாட்டு இல்லாமல் சிறையில் இருக்கிறார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தெளிவற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர, 2019 ஏப்ரல் பயங்கரவாத குண்டுத் தாக்குலுக்குப் பின்னர், இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட ஏனைய எவர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.

1979 இல் நிறைவேற்றப்பட்ட அடக்குமுறையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பொலிசாருக்கு யாரையும் பல மாதங்கள் தடுத்து வைக்க முடியும், சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற முடியும் மற்றும் அந்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்த முடியும். தமிழ் இளைஞர்களையும் அரசியல் எதிரிகளையும் தடுத்து வைக்க, இந்த சட்டம், குறிப்பாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத போரின் போது பரவலாக பயன்படுத்தப்பட்டது.

அதன் முஸ்லீம் விரோத பிரச்சாரத்திற்கு ஏற்ப, ஏப்ரல் 14 அன்று ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா மற்றும் ஒன்பது உள்ளூர் முஸ்லீம் குழுக்கள் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு, இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய எவரையும் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்று அறிவிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதிபலிக்கும் விதமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. எவ்வாறெனினும், ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், ஒரு பாசிச பௌத்த குழுவான பொதுபல சேனாவை இராஜபக்ஷ ஆட்சி தடை செய்யவில்லை. இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவிய அதிதீவிர வலதுசாரி பௌத்த அமைப்புகளில் பொதுபல சேனாவும் ஒன்றாகும்.

முன்னர் குறிப்பிட்டபடி, செவ்வாயன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் பிரேரணைக்கு ஏற்பவே புர்கா, நிகாப் மற்றும் ‘அனைத்து முக-மூடிகளையும்’ தடை செய்வதற்கான திட்டத்திற்கு இராஜபக்ஷவின் அமைச்சரவை,ஒப்புதல் அளித்தது.

முன்னாள் கடற்படை அட்மிராலான வீரசேகர, மார்ச் மாத தொடக்கத்தில் இந்த தடைக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மார்ச் 23 அன்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதற்காக, கொழும்பானது முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றதால் இந்த தடை திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அனுசரணையளித்த இந்த தீர்மானத்திற்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாறாக, பெய்ஜிங்குடனான தனது உறவை முறித்துக் கொள்ளவும், சீனாவுக்கு எதிரான போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இராஜபக்ஷவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த தீர்மானம் கொண்டுரவப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை கொழும்பு தண்டிக்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்டத்தினரது அழுத்தத்திற்கு, குறிப்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கோரிக்கைக்கு பதிலிறுக்கும் விதமாகவே அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களும் கூறுகின்றன. எவ்வாறாயினும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத நடவடிக்கைகள், சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு பரந்த திருப்பத்துடன் ஒத்துப்போகின்றன.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வந்த சமூக எதிர்ப்பின் மத்தியிலே நடந்தது. ஊடக அறிக்கைகளின் படி, திட்டமிடப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் பற்றி, அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் மட்டத்தினருக்கு இந்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது.

ஆளும் உயரடுக்கு பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு அனுமதித்தது, பின்னர் அதை முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டிவிடுவதற்கும், தீவிர வலதுசாரி சக்திகளை திரட்டுவதற்கும், அரச அடக்குமுறையை அதிகரிப்பதை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தியது. ‘தேசிய பாதுகாப்பை’ தக்கவைக்க ஒரு வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக வாக்குறுதியளிப்பதற்காக இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் குண்டுத் தாக்குதல்களை பற்றிக்கொண்டன.

18 மாதம் ஆட்சியில் இருந்தபின், இராஜபக்ஷ ஆட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், பெருகிவரும் கடன்கள், ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியுடன் சிக்கலில் உள்ளது. வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள், பணவீக்கம், சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகள் மற்றும் மோசமான வறுமைக்கும் எதிராக சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் சமூக அமைதியின்மை குறித்து விழிப்படைந்துள்ள இராஜபக்ஷவைச் சுற்றியுள்ள தீவிர வலதுசாரி சக்திகள், இன்னும் தீவிரமான சர்வாதிகார வழிமுறைகளைக் கோருகின்றன. ஏப்ரல் 12 அன்று, இதற்கு குரல் கொடுத்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதி இராஜபக்ஷவை ‘ஹிட்லரைப் போல செயல்பட’ அழைப்பு விடுத்தார்.

கடந்த வாரம், இராஜபக்ஷவின் அமைச்சரவை, இணையத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கோரும் பத்திரத்தை அங்கீகரித்ததுடன், அரசாங்கத்திற்கு எதிரான “தவறான தகவல்களை” கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அமுல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 22ல், இராஜபக்ஷ, இலங்கையின் 25 மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களுக்கு அருகிலுள்ள சர்வதேச நீரிலும் ‘பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக’ ஆயுதப்படைகளை அணிதிரட்டுவதற்கான வர்த்தமானியை வெளியிட்டார்.

கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் புதிய அலைகளை தடுப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகின்றது. ஆனால், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பை அடக்குவதற்கு இராணுவத்தை மேலும் தயார் செய்வதே இதன் உண்மையான நோக்கமாகும்.

கொழும்பின் முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டல்களை தொழிலாள வர்க்கம் எதிர்ப்பதோடு எச்சரிக்கை அடையவும் வேண்டும். அனைத்து வகையான தேசியவாதத்தையும் வகுப்புவாதத்தையும் நிராகரிப்பதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்களால் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தங்கள் பொதுவான வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஒன்றுபட முடியும்.

Related posts

விஜயதாச விவகாரம், அதிருப்தியில் பஷில்..!!

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!