(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையின் திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன இருவருக்கும் சந்தரப்பம் கிடைத்துள்ளது.
இதன்படி திசர பெரேரா கராச்சி கிங்ஸ் அணிக்காகவும் சீக்குகே பிரசன்ன லாஹூர் குவாலண்டர்ஸ் அணிக்காவும் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான பி.எஸ்.எல். போட்டித் தொடரானது 14 போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அதிகாரிகள் என சிலருக்கு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இப்போட்டித் தொடரை இடைநடுவில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எஞ்சிய போட்டிகளை நடத்த காலவரையின்றி பிற்போடப்பட்டது.
போட்டிகளை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதால், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
எனினும், இப்போட்டித் தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றமையால் பி.எஸ்.எல். தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட முடியாதுள்ளளது. ஆகவே, குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக வேறு வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தானின் சகலதுறை வீரரான மொஹமட் நபியின் வெற்றிடத்துக்கு திசர பெரேராவும், லாஹூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோ டென்லீயின் வெற்றிடத்துக்கு சீக்குகே பிரசன்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டித் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் எனவும், இறுதிப் போட்டி ஜூன் மாதம் 20 ஆம் திகதியன்று நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.