உள்நாடு

சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டமையினை தொடர்ந்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனங்களும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது கைதுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்,

“குற்றப்புலனாய்வு திணைக்கள உறுப்பினர்கள் (சீ.ஐ.டி) பௌத்தாலோக மாவத்தையில் உள்ள எனது வீட்டினை அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்து என்னை கைது செய்ய வந்துள்ளனர். அவர்களிடம் கைது செய்யப்படும் வகையில் பிடியாணைகள் இருக்கவில்லை. எனது சகோதரரையும் கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், எல்லாவிதத்திலும் நான் சட்ட ரீதியாக ஒத்துழைப்பு வழங்கினேன். இது அநியாயம்,” என முன்னாள் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் சார்பில் ஒரு சட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ருஷ்டி ஹபீப், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து விசாரணைகளுக்கும் ரிஷாத் முன்னின்று ஒத்துழைத்ததாகவும், ரிஷாத் அல்லது ரியாஜ் தற்கொலை குண்டுவீச்சாளர்களுக்கு உதவியது அல்லது உதவியது என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரிஷாத் மற்றும் ரியாஜின் கைது தொடர்பில் AL Jazeera,  ARAB News ஆகிய முன்னணி சர்வதேச செய்தித் தளங்களும் தங்கள் கவனத்தினை திருப்பி செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களது கைது தொடர்பில் உள்நாட்டிலும் எதிர்ப்பு கண்டனங்கள் எழுந்து வருகின்றது. கைதின் பின்னணி அரசியல் பழிவாங்கல் என்றும் இனவாத குறி என்றும் குரல்கள் மேலெழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செ.கஜேந்திரன் (பா.உ ) உட்பட 06  பேர்  கைது !

இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அமுலாகும் புதிய சட்டம்!