விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி

(UTV |  பாகிஸ்தான்) – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை 6 முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் 2 தடவையும் (2012, 2016), இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி நடைபெறும் இடங்களும், திகதி விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறும் இடங்களின் விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.ஐ.) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 இடங்களில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திலும் 20 ஒவர் உலக கோப்பை போட்டி நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, தர்மசாலா ஆகிய இடங்களிலும் போட்டி நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில்தான் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்கிறது. இதற்கான விசா அனுமதியை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கேட்டு இருந்தது.

இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

“பாகிஸ்தான் வீரருக்கான விசா பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எல்லை தாண்டி அனுமதி கிடைக்குமா? என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை” என்றார்.

Related posts

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

தொடரிலிருந்து விலகிய பெப் டு பிளசிஸ்

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்