உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

(UTV | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கெப் ஒன்றை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுப்பதற்காக அதிரடிப்படையின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் ஊடாக பயணித்த கெப் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு அதிரடிப்படை அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால், டயர்களில் காற்றை இழக்கச்செய்யும் செயற்கை முள் கருவிகளை வீதியில் இட்டுள்ளனர்.

இதனையடுத்து, கெப்பின் டயர்களில் காற்று வெளியேறியுள்ளது. அதன்பின்னர், கெப் தொடர்ந்தும் பயணித்ததுடன் சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகளையும் மோதிச்செல்ல முயன்றதையடுத்து அதிரடிப்படையினர் கெப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், கெப் பழுதடைந்த டயர்களுடன் தப்பிச்சென்றுள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர், இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

ஓய்வூதிய வயது தொடர்பில் தெளிவுபடுத்துதல்

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு